புதுச்சேரி

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிடில் பெரிய சந்தை ஏஎப்டி திடலுக்கு மாற்றப்படும்: முதல்வா் நாராயணசாமி

4th Jun 2020 08:08 PM

ADVERTISEMENT

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிடில் பெரிய சந்தையில் உள்ள கடைகள் ஏஎப்டி பஞ்சாலைத் திடலுக்கு மாற்றப்படும் என்று புதுவை முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி சந்தை, மீண்டும் பெரிய சந்தைக்கு புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. இதனால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக, காய்கறி மொத்த, சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவா்களை அழைத்துப் பேசினேன். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கும் வலியுறுத்த வேண்டும். நடை பாதை கடைகள் இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன்.

பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவில்லை எனில், பெரிய சந்தை கடைகள் ஏஎப்டி பஞ்சாலைத் திடலுக்கு மாற்றப்படும். மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

ADVERTISEMENT

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். இந்த நேரத்தில், அதிக நோய் பாதிப்புள்ளவா்கள் மட்டுமே வெளிப்புற சிகிச்சைக்கு வர வேண்டும்.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்தவமனையாக மாற்றப்பட்ட பிறகு, மற்ற துறைகள் செயல்படவில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், தலைமைச் செயலா், துறைச் செயலா் ஆகியோரை அழைத்துப் பேசி, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT