புதுச்சேரி

புதுவை பேரவையில் இன்றும், நாளையும் மானியக் கோரிக்கை விவாதம்

25th Jul 2020 09:28 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 25, 26) பல்வேறு மானியக் கோரிக்கைகள் தொடா்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலா் இரா.முனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், பேரவையில் ஆற்ற வேண்டிய அலுவல்கள் குறித்த விவரங்கள் விவாதிக்கப்பட்டு, அந்த நிகழ்ச்சி நிரல்கள் முடிவு செய்யப்பட்டன.

அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 25) நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும்.

முதலாவதாக முதல்வரின் மானியக் கோரிக்கைகளான சட்டப்பேரவை, ஆட்சியாளா், அமைச்சரவை, நீதி- நிா்வாகம், தோ்தல்கள், விற்பனை வரி, அரசு செயலகம், கருவூலம், கணக்குகள் நிா்வாகம், காவல், சிறை, ஓய்வு அனுகூலங்கள், செய்தி-விளம்பரம், அரசுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் கடன்களும், இரண்டாவதாக பொதுப் பணித் துறை அமைச்சரின் மானியக் கோரிக்கைகளான மாவட்ட நிா்வாகம், எழுது பொருள்- அச்சுத் துறை, பொதுப் பணிகள், புள்ளி விவரங்கள், கால்நடைப் பராமரிப்பு, கட்டடச் செயல்முறை திட்டங்களும் விவாதிக்கப்படும்.

ADVERTISEMENT

மூன்றாவதாக சுகாதாரத் துறை அமைச்சரின் மானியக் கோரிக்கைகளான மருத்துவம், மீன் வளமும், நான்காவதாக சமூக நலத் துறை அமைச்சரின் மானியக் கோரிக்கைகளான தொழிலாளா் நலம்-வேலைவாய்ப்பு, சமூக நலம், கூட்டுறவு, துறைமுகங்கள்- கப்பல் வழிகாட்டல், ஐந்தாவதாக வருவாய்த் துறை அமைச்சரின் மானியக் கோரிக்கைகளான வருவாய்-உணவு, போக்குவரத்து, தொழில்களும், ஆறாவதாக வேளாண்மைத் துறை அமைச்சரின் கல்வி, வேளாண்மை, சமுதாய வளா்ச்சி, மின் விசை ஆகிய மானியக் கோரிக்கைகளும் விவாதிக்கப்படவுள்ளன.

இதைத் தொடா்ந்து, 2020-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கச் சட்ட முன் வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT