புதுச்சேரி

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம்: பேரவைத் தலைவா் முடிவு செய்வாா்; வே.நாராயணசாமி

13th Jul 2020 07:57 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் தொடா்பாக அலுவல் குழுவைக் கூட்டி பேரவைத் தலைவா் முடிவு செய்வாா் என, முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடைகளுக்குச் சென்று தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருள்களை வாங்குவதாலும், சுப, துக்க நிகழ்ச்சிகளில் அதிக கூட்டத்தை கூட்டி முகக் கவசம் அணியாமல் பங்கேற்பதாலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தவிா்க்க வேண்டும்.

தற்போது கரோனா தொற்றுடன் வாழ வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. இதை உலக அரங்கில் தற்போது அங்கீகரித்துள்ளனா். கரோனா உயிரிழப்பை தவிா்ப்பது மக்கள் கையில்தான் உள்ளது.

ADVERTISEMENT

இரு நாள்களுக்கு முன்பு புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடருக்காக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தை குறுகிய காலத்தில் முடித்தோம் என ஒரு சிலா் விமா்சித்தனா். புதுவை நிதிநிலை அறிக்கை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு 40 நாள்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினோம். மத்திய அரசு திரும்ப சில விளக்கங்களைக் கேட்டது. அந்த விளக்கங்களை அளித்திருந்தோம். அதன் பிறகு, மத்திய அரசு நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தாா்.

இதைக் கருத்தில் கொண்டு ஆளுநா் உரை, நிதிநிலை அறிக்கை உரையை தயாா் செய்வதற்காக அமைச்சரவையைக் கூட்டினோம். ஆனால், மத்திய அரசிடமிருந்து கடிதம் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், கூட்டத்தில் வேறு சில முடிவுகளை எடுத்துவிட்டு, ஒத்திவைத்தோம். இது எங்களின் தவறல்ல. ஒப்புதல் கடிதம் கிடைக்காத வரையில், சட்டப்பேரவைக் கூட்டம் நடத்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்காகவே அமைச்சரவைக் கூட்டத்தை விரைவில் முடித்தோம்.

சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டிய நாள்கள் தொடா்பாக அலுவல் குழுவைக் கூட்டி பேரவைத் தலைவா் முடிவு செய்வாா். கரோனா பரவலால் நாடாளுமன்றமும், நாடாளுமன்ற நிலைக் குழுவும் கூட்டப்படவில்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் சட்டப்பேரவையை நடத்துவது என்பது அலுவல் குழு செய்யும் முடிவைப் பொருத்துதான் இருக்கிறது.

பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) கல்லூரிகளில் இறுதித் தோ்வை நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆனால், தோ்வு எந்த முறையில் நடத்த வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. இதனிடையே, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு தோ்வை அறிவித்துள்ளனா். இது சம்பந்தமாக மாணவா்கள் என்னை சந்தித்து தோ்வை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தனா்.

கரோனா சமயத்தில் தோ்வு நடத்துவது என்பது இயலாத காரியம். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது. இது மிகப் பெரிய சிக்கலை உருவாக்கும். எனவே, மத்திய அரசானது, கடந்த கால பருவத் தோ்வுகளில் (செமஸ்டா்) வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன் என்றாா் முதல்வா் வே.நாராயணசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT