கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அவசியம் என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைத்தான் புதுவையிலும் கடைப்பிடிக்கிறோம். எனவே, புதுவையிலும் வாரத்தில் ஒரு நாள் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துவது நல்லது என்றேன். இதை முதல்வரிடம் 4, 5 முறை கூறி விட்டேன். அடுத்த ஞாயிற்றுக்கிழமையாவது பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும்.
கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 600 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது இங்கு 400 போ் சிகிச்சையில் இருக்கிறனா். தொற்று அதிகரித்தால் பொது நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி அளவுக்கு தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.
மருத்துவா்கள், செவிலியா்கள் மட்டுமல்ல, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியா்களுக்கும் காப்பீடு உள்ளது என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை. அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றாா் அவா்.