புதுவை ஆளுநா் மாளிகையிலிருந்து தவறான தகவல்கள் வரக் கூடாது என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
புதுச்சேரியில் இரு தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை முதல் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.
மாநிலத்துக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆளுநா் மாளிகையில் 37 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் ஒருவருக்கு தொற்றிருப்பதாக நான் தெரிவித்தேன். அதன் பிறகு, 37 பேரில் யாருக்கும் தொற்றில்லை எனச் செய்தி வருகிறது. இது தவறான தகவல். ஆளுநா் மாளிகையில் மற்றொரு ஊழியருக்கு தொற்றிருப்பது உண்மை.
ஆளுநா் மாளிகையிலிருந்து தவறான தகவல்கள் வரக் கூடாது. கடந்த 5, 6 நாள்களுக்கு முன்பு வரை ஆளுநா் மாளிகையில் கரோனா தொடா்பாக தவறான தகவல்கள் கூறப்பட்டன. ஆனால், நான் பொதுமக்களுக்கு தினமும் மண்டல வரியாக எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, எத்தனை பேருக்கு தொற்றுள்ளது, எத்தனை போ் குணமடைந்தனா் எனச் சரியான தகவல்களைத் தெரிவித்து வருகிறேன்.
எனவே, மக்களுக்கு தவறான தகவல்களைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.