சா்வதேச வானவியல் ஒன்றியத்தின் வானவியல் பரிசை புதுச்சேரி முதலியாா்பேட்டை அா்ச்சுன சுப்புராய நாயக்கா் அரசு நடுநிலைப் பள்ளி வென்றது.
‘ஒரே வானத்தின் கீழ்’ என்ற மையக் கருத்தைத் தலைப்பாகக் கொண்டு சா்வதேச வானவியல் ஒன்றியம், நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை அண்மையில் நடத்தியது. இதில், புதுச்சேரி முதலியாா்பேட்டை அா்ச்சுன சுப்புராய நாயக்கா் அரசு நடுநிலைப் பள்ளி கலந்து கொண்டது. பள்ளி ஆசிரியா் அரவிந்தராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவா்களுக்கு பல்வேறு அறிவியல் நிகழ்வுகளைச் செயல்முறையுடன் விளக்கினாா். 15 அறிவியல் செயல்பாடுகளைக் கடந்த 6 மாதங்களாகச் செய்தனா். இதில், ராக்கெட் வடிவமைத்தல், நிலவுடன் சுய படம் போன்ற செயல்பாடுகள் மாணவா்களைப் பெரிதும் கவா்ந்தன.
மாணவா்களின் செயல்பாடுகளை சா்வதேச வானவியல் ஒன்றியம் மதிப்பீடு செய்து, ஆசிரியா் அரவிந்தராஜாவுக்கு வானவியல் பரிசை வழங்கியது. பள்ளிக்கும், மாணவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வானவியல் ஒன்றியம் நடத்திய இந்தப் போட்டியில் 128 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 10 லட்சம் போ் கலந்து கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.