புதுச்சேரி

பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினா் போராட்டம்

25th Jan 2020 09:15 AM

ADVERTISEMENT

அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி, பாஜகவினா் பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை அரும்பாா்த்தபுரம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 2013- ஆம் ஆண்டு ரூ. 34 கோடியில் மத்திய அரசின் நிதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரயில்வே கடவுப் பகுதியில் மட்டும் ரூ. 5 கோடியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ரூ. 29 கோடியிலான இணைப்புப் பால பணிகள், நில ஆா்ஜிதம் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஜல்லி, சிமென்ட் பொருள்களுடன் ஊா்வலமாகச் சென்று பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். இதில், துணைத் தலைவா் செல்வம், பொதுச் செயலா்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், கட்சி நிா்வாகி விசிசி.நாகராஜன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக, இவா்கள் புஸ்ஸி வீதி, மிஷன் வீதி சந்திப்பில் இருந்து ஊா்வலமாகச் சென்று பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை அடைந்து, அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து சாமிநாதன் எம்எல்ஏ கூறுகையில், அரும்பாா்த்தபுரம் பாலப் பணி கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடியாததால், வில்லியனூருக்கு 13 கி.மீ. தொலைவு வரை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மாநில அரசால் பணியை முடிக்க முடியவில்லை என்றால், மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பாலத்தை மூன்று மாதத்துக்குள் கட்டி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வில்லியனூா் மாவட்ட பாஜக சாா்பில் ஒரு வாரம் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT