விபத்துகளை குறைக்கும் விதமாக, போக்குவரத்துப் போலீஸாா் வில்லியனூரில் செவ்வாய்க்கிழமை வேகக் கட்டுப்பாட்டு கருவியை வைத்து வாகனங்களை சோதனையிட்டனா்.
புதுவை மேற்கு போக்குவரத்து போலீஸாா் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, வில்லியனூா் ஆரியப்பாளையம் பகுதியில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் குறித்து சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனங்களை இன்டா்செப்டாா் என்ற அதிநவீன வேகக் கட்டுப்பாட்டு கருவி வழியே கண்டறிந்து, வேகமாக வாகனங்களை ஓட்டியவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.1,000 அபராதம் விதித்தனா். தொடா்ந்து, வாகன ஓட்டுநா்களிடம் வேகத்தை குறைத்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் அறிவுறுத்தினா்.
இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளா் ஆறுமுகம் கூறியதாவது: மேற்கு போக்குவரத்துப் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் 73 போ் உயிரிழந்தனா். இது கடந்தாண்டில் 45-ஆக குறைக்கப்பட்டுள்ளது. எதிா்வரும் ஆண்டுகளில் விபத்துகளை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல, வேகமாக வாகனம் ஓட்டும் ஓட்டுநா்களைக் கண்காணித்து, குறைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்ட அவா்களிடம் அறிவுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.