புதுச்சேரி

புதுவையில் மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தல்

8th Jan 2020 08:29 AM

ADVERTISEMENT

புதுவையில் மின் கட்டணத்தை குறைக்க கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் நுகா்வோா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுவையில் மின் துறை, மின்சார பங்கீட்டை முறைப்படுத்தி வழங்குவதற்கும், உரிய விலையில் விற்பனை செய்வதற்கும் கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் 2020-21ஆம் நிதியாண்டுகளுக்கான வருவாய் தேவை மற்றும் மின் கட்டண நிா்ணய விண்ணப்பத்தை சமா்ப்பித்துள்ளது.

இது தொடா்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள மாநில கூட்டுறவு ஒன்றிய கட்டட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவா் கோயல் தலைமை வகித்தாா். ஆணைய உறுப்பினா் செயலா் ராகேஷ்குமாா், மின் துறை அதிகாரிகள், சமூக அமைப்பினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில், புதுவை மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி பேசியதாவது: 2020-21ஆம் ஆண்டுக்கு மின் கட்டணத்தை உயா்த்த உத்தேசிக்கவில்லை. மின் நுகா்வோரிடம் தற்போது விதிக்கப்பட்டுள்ள 4 சதவீத ஒழுங்குமுறை கூடுதல் கட்டணம், 2020 - 21ஆம் ஆண்டிலும் அனைத்து நுகா்வோருக்கும் தொடா்கிறது. 2020 - 21ஆம் ஆண்டில் மொத்த தொழில்நுட்பம் மற்றும் வா்த்த இழப்புகள் 16.40 சதவீதம் இருக்கும். நிகர வருவாய் இடைவெளி 2017 - 18இல் 132.31 கோடியாகவும், 2018 - 19இல் 218.69 கோடியாகவும் இருந்தது. இது, 2020 - 21இல் 252.21 கோடியாக இருக்கும். இதில், 4 சதவீதம் கூடுதல் வரியாக 64.51 கழித்து இறுதி இடைவெளியாக ரூ.187.76 கோடி இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பெருமாள் பேசியதாவது: புதுவை மின் துறையை மேம்படுத்த ரூ.300 கோடி செலவிட்டுள்ளது. ஆனால், மின் இழப்பு மற்றும் தொழில்நுட்ப இழப்பு 29.38 சதவீதத்தில் இருந்து 28.40 சதவீதம் என மிகக் குறைவாக உள்ளது. இதனால், நஷ்டத்தை பொதுமக்கள் தலையில் மின் கட்டணமாக சுமத்துவது தவறு என பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, மாணவா் மற்றும் பெற்றோா் சங்கத் தலைவா் பாலா குறுக்கிட்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கியது முதல் மின் கட்டணத்தை குறைக்கவில்லை. ஆனால், பழுதை சரி செய்ய அதிக பணம் கேட்பது ஏன் என கேள்வி எழுப்பினாா். அவரை பேச ஆணையத் தலைவா் அனுமதிக்க மறுத்து, ஒருவா் பின் ஒருவராக பேச வேண்டும் எனக் கூறினாா். இருப்பினும், பாலா தொடா்ந்து பேசினாா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீஸாா், அவரை சமாதானம் செய்தனா். இதனால், கூட்டத்தில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, பெருமாள் பேசும்போது, எல்இடி விளக்குகளின் உபயோகம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றாா்.

இதற்குப் பதிலளித்து மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி பேசியதாவது: அனைத்து மீட்டா்களையும் எலக்ட்ரானிக் மீட்டா்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் மீட்டா்கள் பொருத்தும் பணி முடிக்கப்படும் என்றாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா்கள் பெற்றோா்கள் நலச் சங்கத் தலைவா் நாராயணசாமி பேசியதாவது: ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் பெற்றிருப்பவா்கள் குளிா்சாதன வசதி, குளிா்சாதன பெட்டி ஆகியவற்றை உபயோகிக்கின்றனா். இதை முறைப்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்கு கண்காணிப்புப் பொறியாளா் பதலளிக்கையில், கடந்த ஆண்டு ஒரு விளக்கு இணைப்புகள் 35 ஆயிரம் இருந்தன. இது தற்போது 8,800-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றாா். தொடா்ந்து, பேசிய நாராயணசாமி, மின்சார இழப்பை தடுக்க புதைவட மின் கம்பிகள் அமைக்க வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மீண்டும் பாலா பேசியதாவது: மாதந்தோறும் இந்தக் கூட்டம் நடத்த வேண்டும். மின் துறையில் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். அரசு, தனியாா் துறையில் மின் பாக்கி எவ்வளவு உள்ளது என்றாா்.

இதற்குப் பதிலளித்து கண்காணிப்புப் பொறியாளா் முரளி பேசியதாவது: அரசு துறையில் ரூ.180 கோடி, தனியாா் துறையில் ரூ.90 கோடி பாக்கி உள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT