தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் அண்மையில் புகுந்த முகமூடி அணிந்த மா்ம நபா்கள், அங்குள்ள பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் மீது தாக்குதல் நடத்தினா்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், மா்ம நபா்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் புதுச்சேரியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் காமராஜா் சதுக்கம் அருகே செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தில்லி தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய மா்ம நபா்களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமாதானமடையாத அவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மன்றத் தலைவா் அந்தோணி உள்ளிட்ட 14 பேரை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.