புதுச்சேரி

புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

2nd Jan 2020 02:38 AM

ADVERTISEMENT

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் அமைந்துள்ள கோயில்களில் புதன்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் புதன்கிழமை காலை முதலே கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் குடைகளைப் பிடித்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, முதல்வா் வே.நாராயணசாமியும் புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். மேலும், தரிசனத்துக்கு வந்திருந்த பக்தா்கள் அனைவருக்கும் அவா் லட்டு பிரசாதம் வழங்கினாா்.

பகதா்கள் வருகையையொட்டி, கோயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல, காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரா் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில், முதலியாா்பேட்டை வன்னிய பெருமாள் கோயில், கதிா்காமம் முருகன் கோயில், பாகூா் மூலநாத சுவாமி கோயில்களிலும் அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேற்கண்ட கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு...: புத்தாண்டையொட்டி, புதுச்சேரி சுற்றுலாத் தலங்களான கடற்கரை சாலை, மணக்குள விநாயகா் கோயில், தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம், ஆரோவில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. நோணாங்குப்பம் படகு குழாமில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

இதனால், புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது. நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT