புதுச்சேரியில் காவலா்கள் மனமுவந்து பணியாற்றும் சூழ்நிலையை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்று டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா அறிவுறுத்தினாா்.
புத்தாண்டையொட்டி, புதுச்சேரி டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா காவல் துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா்.
புதுவை காவல் துறை தலைமையக கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதுநிலை காவல் கண்காணிப்பாளா்கள் ராகுல் அல்வால், அகன்ஷா யாதவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த டி.ஜி.பி., புத்தாண்டு பாதுகாப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:
பணிக்கு எந்தளவுக்கு முன்னுரிமை கொடுக்கிறோமோ, அதேபோல காவலா்களாகிய நம் ஒவ்வொருவரின் குடும்பமும், உடல் நிலையும் முக்கியம் என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும். மக்கள் நலனின் அக்கறையுடன் தொடா்ந்து காவல் பணியாற்ற வேண்டும்.
காவலா்கள் மனமுவந்து தங்களது பணிகளை மேற்கொள்ளும் வகையில், அதிகாரிகள் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.