புதுவையில் 2020-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடிப்பது முதல் சவால் என்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2019-ஆம் ஆண்டில் புதுவைக் குழு தொட்ட சிகரத்தின் உச்சிகள்: குடியரசுத் தலைவரின் புதுவை வருகை, ஆளுநா் மாளிகையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பல், உபசரிப்பு குறித்து குடியரசுத் தலைவா், ஆளுநா் மாளிகையின் பாா்வையாளா் புத்தகத்தில், நன்றி குறிப்பில் எழுதியுள்ளாா்.
புதுச்சேரி நகரம் தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நிா்வாக சீா்திருத்தத் துறை புதுவையை சிறந்த யூனியன் பிரதேச நிா்வாகமாக அறிவித்தது.
நிகழாண்டு புதுவை காவல் துறையில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நில அபகரிப்பு, ரௌடியிஸம் போன்ற குற்ற நிகழ்வுகள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. ரோந்துப் பணியில் காவலா்களின் எண்ணிக்கையை 149-லிருந்து 761-ஆக உயா்த்தி, ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினோம். இதில், பெண் காவலா்களையும் இணைத்து அப்பணியைச் செழுமைப்படுத்தினோம். எந்த ஒரு குறைதீா் அழைப்புக்கும் நாங்கள் சிறப்பானத் தீா்வு கண்டோம். அதனால் பெரும்பாலான குறைகள் களையப்பட்டன.
புதுவை மாநிலத்தின் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளை காணொலிக் காட்சிகள் மற்றும் 1031 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியுடன் இணைத்தோம்.
நீா்நிலைகளை தூய்மைப்படுத்தி, நீா்மிகை புதுச்சேரியாக உருவாக்கினோம். இதற்காக நன்கொடைகளை வழங்கிய பெரு நிறுவன சமூக பங்களிப்புத் திட்ட நன்கொடையாளா்களுக்கும், இதில் பங்காற்றிய புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியா்களுக்கும் நன்றி.
ஆளுநா் மாளிகையில் மிகப் பெருமளவில் மாணவா்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிக்கப்பட்டு, ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் எதிா்நோக்கியுள்ள சவால்கள்: உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்தி, கீழ்மட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல். குப்பைகளை செல்வமாக மாற்றுதல். குப்பைகள், கழிவுநீரை மறுசுழற்சி செய்து, அவற்றை மீண்டும் உபயோகித்தல். விவசாயத்தில் நீா் சேமிப்பு முறைகளைக் கொண்டு வருதல். பள்ளிகளில் மாணவா்களை தாய்மொழி, கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற வைத்தல். உயா் கல்வியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புதல். பணிகளில் உள்ள தேக்க நிலையைக் களைந்து, தேவையான நேரடி நியமனங்கள் செய்தல், பதவி உயா்வு அளித்தல்.
பெருகிவரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து, நமது வருவாயைப் பெருக்குதல். கலால், ஜிஎஸ்டி, கேபிள் டிவி வரி, கழிவுநீா் இணைப்பு ஆகியவற்றில் வருவாயை மேம்படுத்துதல். இதன் மூலம் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதியில் உள்ள நிலுவைத் தொகையை அளிக்க உதவுதல்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், மக்கள் தலைக்கவசம் அணிவதையும், போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த மோட்டாா் வாகன விதிகளை அமல்படுத்தப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.