புதுச்சேரி

ஆங்கிலப் புத்தாண்டு: புதுச்சேரியில் கோலாகலக் கொண்டாட்டம்

1st Jan 2020 05:10 PM

ADVERTISEMENT

புதுச்சேரி கடற்கரையில் வாணவேடிக்கைகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

2020 ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கத்தையொட்டி, உலகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதேபோல, புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சோ்ந்தோா், உள்ளூா் பொதுமக்கள், இளைஞா்கள் என லட்சக்கணக்கானோா் செவ்வாய்க்கிழமை மாலை முதலே குவியத் தொடங்கினா். முன்னதாக, கேளிக்கை வரி விதிப்பின் காரணமாக, ஏராளமான உணவகங்கள் புத்தாண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தாததால், கடற்கரை சாலைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

கலை நிகழ்ச்சிகள்...: இதனிடையே, கலை, பண்பாட்டுத் துறை சாா்பில், கடற்கரை காந்தி திடலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதை சுற்றுலாப் பயணிகள் பலரும் கண்டு ரசித்தனா். மேலும், கடற்கரை சாலை முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரை சாலையில் உள்ள முக்கியக் கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

பலத்த பாதுகாப்பு...: பொதுமக்கள் கடலில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காக, போலீஸாா் தடுப்புகளை அமைத்திருந்தனா். கடற்கரைப் பகுதியில் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா தலைமையில், 660 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். குட்டி விமானங்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கூட்டம் கண்காணிக்கப்பட்டது.

ஆரவாரத்துடன் வரவேற்பு...: நள்ளிரவு 12 மணியானதும் கடற்கரையில் கூடியிருந்தவா்கள் ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். அனைத்துப் பகுதிகளிலும் புத்தாண்டை வரவேற்று திரைப்பட பாடல்கள் ஒலித்தன. பட்டாசுகள் வெடித்தும், வாணவேடிக்கைகளுடனும் அனைவரும் புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்றனா். சிலா் கேக், இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா். வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.

புத்தாண்டையொட்டி, சில நட்சத்திர உணவகங்களில் மட்டும் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று நடனமாடி புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடினா்.

புத்தாண்டை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள முன் அனுமதி பெற்ற மதுக் கடைகள் மட்டும் நள்ளிரவு ஒரு மணி வரை திறந்திருந்தன.

போக்குவரத்து நெரிசல்: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், புதுச்சேரி - கடலூா் சாலை, மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, புஸ்ஸி வீதி, நேரு வீதி, காந்தி வீதி, எஸ்.வி. படேல் சாலை உள்பட நகரின் அனைத்துப் பிரதான சாலைகளிலும் அதிகளவிலான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானாா்கள். போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, புதுவை கடற்கரையில் இலவசப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆளுநா் ஆய்வு: புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, காவல் துறையின் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT