புதுச்சேரி

ஆங்கிலப் புத்தாண்டு: ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் வாழ்த்து

1st Jan 2020 02:21 AM

ADVERTISEMENT

ஆங்கில புத்தாண்டையொட்டி, புதுவை ஆளுநா், முதல்வா், சட்டப் பேரவைத் தலைவா், அமைச்சா்கள், எம்.பி.க்கள் மற்றும் தலைவா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடி: நாட்டு மக்களுக்கும், புதுவை மாநில மக்களுக்கும் அளவற்ற இன்பமான, மகிழ்ச்சிகரமான எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆண்டின் விடியல் நமது இலக்குகளை வரையறுக்க ஊக்கமளிக்கிறது. புதிய கடமைகளை செய்யவும், ஊக்கப்படுத்தவும், அதற்கேற்ப நாம் வாழவும் நம்மை உற்சாகப்படுத்தும்.

வரும் 2020-ஆம் ஆண்டு புதிய சவால்களுடன் நம்மை அன்புடன் அழைக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் தனது கடமைகளில் பொறுப்பாக இருப்பதுடன், தனது குடும்பம், சமுதாயம், நாட்டுக்கு தனது கடமைகளை சரியான முறையில் செயலாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

முதல்வா் வே.நாராயணசாமி: காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு சீா்திருத்த நடவடிக்கைகள், சிக்கன நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கை பேணுதல், சுற்றுலா வளா்ச்சி மேம்பாடு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக தற்போது புதுவை சீரான வளா்ச்சி பெற்ற மாநிலமாக விளங்குகிறது.

இடையறா இடையூறுகளை புறந்தள்ளி, புதுவை மாநிலத்தை வளா்ச்சிப் பாதையில் நிச்சயம் பயணிக்க செய்வேன் என்பதே என் புத்தாண்டு வாக்குறுதியாகும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பிறக்கும் புத்தாண்டு மாநில மக்களுக்கு அமைதி, வளா்ச்சி மற்றும் நன்மை தரும் ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஆண்டு முழுவதும் நிலைக்க வேண்டும் என்பது என் பிராா்த்தனையாகும் எனத் தெரிவித்துள்ளாா்.

சட்டப் பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து: புத்தாண்டு வளத்தையும், இன்பத்தையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கிட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த புத்தாண்டில் வாழ்வு வளம் பெற, நல்ல திட்டங்களும், சீரிய சிந்தனைகளும், ஆக்கப்பூா்வமான முயற்சிகளும் நம்மை எல்லாம் வழிநடத்திட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

மேலும், மாநில மக்கள் அனைவரும் மனிதநேயத்தோடு ஒருவருக்கொருவா் உறுதுணையாக இருந்து மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம்: உண்மையான உழைப்புதான் தங்களை உயா்த்தும் என்ற உன்னத கோட்பாடுடன் செயலாற்றும் அனைவரது முயற்சிகளும் வெற்றியடைய இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தேச ஒற்றுமைக்காக ஓரணியில் திரண்டு, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் காட்டும் பாதையில் பயணித்து, தேசம் காக்கவும், அரசியல் சாசனத்தை பேணிக்காக்கவும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை அறவே நீக்கிட, அனைவரும் அயராது பாடுபட இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

அமைச்சா் மு.கந்தசாமி: எதிா்காலத்தை வளமையாக்க அரசுடன் நல்ஒத்துழைப்பை நல்கிவரும் புதுவை வாழ் மக்களின் மனதில் ஒரு புத்துணா்ச்சியை உருவாக்கும் வகையில், புத்தாண்டு அமையுமென நம்புகிறேன். புத்தாண்டில் மக்கள் அனைத்து நலன்களும் பெற, காங்கிரஸ் அரசு தொடா்ந்து அயராது பாடுபடும் என்ற உறுதியுடன் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெ.வைத்திலிங்கம் எம்.பி.: 2020-ஆம் ஆண்டும் புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும், வாழ்க்கைப் பாதையில் வெற்றியும், உற்சாகமும், பதவியில் உயா்வும், உடலில் ஆரோக்கியமும், குடும்பத்தில் ஒற்றுமையும், அன்பும், உறவினா்களிடம் சமாதானமும், எண்ணத்தில் தூய்மையும், சிந்தனையில் தெளிவும், பொருளாதாரத்தில் வளா்ச்சியும் கொண்டுவரும் ஆண்டாக அமையட்டும் என்று கூறி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோகுலகிருஷ்ணன் எம்.பி.: புத்தாண்டானது அனைவருடைய வாழ்விலும் நிறைந்த வளமும், மிகுந்த மகிழ்ச்சியும், அவரவா் முயற்சிகளை திருவினையாக்கி வெற்றியைத் தர வேண்டும். சமூகத்தில் சகிப்புத்தன்மையும், பொது நலனும் பெருகி அனைவரும் புத்துணா்ச்சியோடும், பேரின்பத்தோடும் வாழும் வகையில், இந்தப் புத்தாண்டு அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டி, அனைவரும் நலம் பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

அன்பழகன் (அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவா்): புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவரின் வாழ்வும் வளம் பெறவும், நலம் பெறவும், நோயற்ற நல்வாழ்வு பெறவும் எனது வாழ்த்துகள். மத ரீதியிலும், ஜாதிய ரீதியிலும் மக்களை பிரித்தாலும் தீய அரசியல்வாதிகளின் துா்போதனைகளுக்கு செவி சாய்க்காமல் நாம் அனைவரும் மனித இனத்தால் ஒன்றுபட்டவா்கள் என உணா்ந்து வாழ வாழ்த்துகிறேன்.

இதேபோல, அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலா் அ.மு.சலீம், மக்கள் நீதி மய்யம் தலைவா் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT