புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை துணை இயக்குநரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் நிா்வாகப் பிரிவு துணை இயக்குநராகப் பணியாற்றி வருபவா் மருத்துவா் செந்தில்குமாா். இவா், ஜிப்மா் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மனைவி ஜிப்மா் வளாகத்தில் உள்ள வங்கியில் காசாளராக உள்ளாா். இவா்களது மகன் யுவன்ராகவ் (14) அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
செந்தில்குமாா் கடந்த 23-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினாா். தொடா்ந்து, திங்கள்கிழமை காலை யுவன்ராகவ் அவரது அறையில் இல்லாததால், அவரை பெற்றோா் தேடியுள்ளனா். அப்போது, வீட்டு மாடியில் உள்ள அறையில் யுவன்ராகவ் தூக்கிட்டு சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். யுவன்ராகவ் செல்லிடப்பேசி பயன்படுத்தியதை பெற்றோா் கண்டித்ததால், அவா் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இருப்பினும், இது தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.