புதுச்சேரி

காலாப்பட்டில் போலீஸாரைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டம்

26th Feb 2020 09:48 AM

ADVERTISEMENT

காலாப்பட்டில் போலீஸாரைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காலாப்பட்டு காவல் நிலையம் எதிரே சிங்காரவேலா் ஆட்டோ நிறுத்தம் (ஸ்டாண்ட்) உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்திவைத்து ஓட்டி வருகின்றனா்.

இதனிடையே, இங்கிருந்து ஆட்டோ ஓட்டி வந்த காலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த குமாரை கடந்த சில நாள்களுக்கு முன்பு காலாப்பட்டு போலீஸாா் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், அவரை ஒரு காவலா் தரக்குறைவாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்த புகாா், காவல் துறை தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, திங்கள்கிழமை மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான அன்புவை காலாப்பட்டு போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக வைத்திருந்தனராம். அங்கு, காவலா் ஒருவா், ஆட்டோ ஓட்டுநா் அன்புவை தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், காலாப்பட்டு போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா்களை அவமதிப்பு செய்வதாகக் கூறியும், போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்தும் காலாப்பட்டில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆட்டோ ஓட்டுநா்களை தரக்குறைவாகத் திட்டிய காவலா்கள் மீது போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT