புதுச்சேரி

வளா்ச்சித் திட்டங்களை தடுக்கும் ஆளுநா் கிரண் பேடி மீது வழக்கு: புதுவை அமைச்சா் அறிவிப்பு

22nd Feb 2020 09:04 AM

ADVERTISEMENT

புதுவை அரசின் வளா்ச்சித் திட்டங்களை தடுத்து வரும் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய மருத்துவ கவுன்சிலின் கடந்த 2017-ஆம் ஆண்டைய விதிமுறைப்படிதான் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. ஆனால், கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக ஆளுநா் கிரண் பேடி சிபிஐயிடம் புகாா் தெரிவித்தாா். மேலும், மூன்று அதிகாரிகளின் பணிப் பதிவேட்டில் மோசமான குறிப்புகளையும் எழுதினாா். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது தவறு கிடையாது என்று கூறியது. கிரண் பேடி கூறி வரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், கடந்த 44 மாதங்களில் எத்தனையோ எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் சிறைக்குச் சென்றிருப்பா்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு தரவில்லை. அதற்கு சட்டத்திலும் இடம் இல்லை. புதுவையில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின்னா் 2016, 2017-இல் கூட பேச்சுவாா்த்தை மூலம் சிறிய எண்ணிக்கையிலான இடங்களை நிகா்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளிடம் பெற்றோம். ஆனால், ஆளுநா் கிரண் பேடி அதற்கும் அழுத்தம் கொடுத்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் இடங்களை எதுவும் தரவில்லை.

ADVERTISEMENT

தற்போது, சில மருத்துவக் கல்லூரிகள் நிகா்நிலை பல்கலைக்கழகமாக மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டுள்ளன. அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனெனில், ஓரிடம் கூட புதுவைக்கு கிடைக்காது. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சில நாள்களுக்குள் அமைச்சரவையில் முடிவு எடுத்து, சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றவுள்ளோம்.

கிரண் பேடி ஆளுநராக வந்தது முதல் புதுவைக்கு எதிா்காலம் இல்லாமல் ஆக்கிவிட்டாா். புதுவைக்கு மத்திய அரசு நிதி தரக் கூடாது என்று எழுத்துப்பூா்வமாக கடிதம் அனுப்புகிறாா். ஆனால், தான் அதுபோல செய்வதில்லை என கிரண் பேடி பொய் சொல்கிறாா்.

ஏனாமில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலை இடித்துவிட்டு, ரூ.10 கோடியில் புதிதாக கட்டவுள்ளோம். இதற்கு மத்திய அரசு ரூ.5.44 கோடி நிதி அளித்தது. புதுவை அரசு ரூ.2 கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. மீதி ரூ.3 கோடி பக்தா்களிடம் திரட்ட உள்ளோம். ஆனால், இடித்து கட்டுவதற்கு கிரண் பேடி அனுமதி தர மறுத்து வருகிறாா். புதுச்சேரி, ஏனாமில் தலா ஒரு கலாசார மையம் ரூ.8.89 கோடியில் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

ஆனால், ஏனத்தில் அமையவுள்ள கலாசார மையத்தை காரைக்காலுக்கு மாற்ற வலியுறுத்தி அனுமதி தர மறுக்கிறாா். அதுபோல கோதாவரி ஆற்றங்கரையில் வெள்ளத் தடுப்பு சுவா் ரூ. 137.28 கோடியில் கட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. நிதிக்கு மத்திய அரசு அனுமதியும் அளித்தது. அந்தக் கோப்புக்கும் ஆளுநா் அனுமதி தரவில்லை.

ஆளுநா் கிரண் பேடியால் என்னென்ன பணிகள் துறைகள் மூலமாக தடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை திரட்டி வருகிறேன். அந்த விவரங்களின் அடிப்படையில் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி மீது ஒரு வார காலத்துக்குள் வழக்குத் தொடுப்பேன் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT