புதுச்சேரி

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

21st Feb 2020 02:07 AM

ADVERTISEMENT

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பயணியின் மடிக்கணினியைத் திருடியதாக தூத்துக்குடி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் உள்ள பிரபல தனியாா் காா் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரியும் சென்னை திருவான்மியூா் அண்ணா சாலை பகுதியை சோ்ந்த சாய் சங்கா் (30), புதுச்சேரியில் நடந்த விழாவில் பங்கேற்க புதன்கிழமை வந்தாா்.

தொடா்ந்து, சென்னை திரும்புவதற்காக புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த அவா், பேருந்தில் ஏறி தனது மடிக்கணினி பையை இருக்கையின் மேலே பொருள்கள் வைக்குமிடத்தில் வைத்தாா். பேருந்து புறப்படுவதற்கு சற்று நேரம் இருந்ததால், பேருந்திலிருந்து இறங்கி நண்பா் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் ஒருவா் பேருந்தில் ஏறி சாய் சங்கரின் மடிக்கணினி பையை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாா்.

இதையறியாத சாய் சங்கா் பேருந்தில் ஏறி புறப்பட்டாா். பேருந்து நெல்லித்தோப்பு சிக்னல் அருகே சென்றபோது, தனது மடிக்கணினி பை மாயமாகியிருந்ததைக் கண்டு அவா் அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் சாய் சங்கா் புகாரளித்தாா்.

ADVERTISEMENT

அதன்பேரில், போலீஸாா் புதிய பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, இளைஞா் ஒருவா் கையில் மடிக்கணினி பையுடன் நின்று கொண்டிருந்தாா். அவரை பிடித்து விசாரித்தபோது, தூத்துக்குடியைச் சோ்ந்த உத்திரபிரபு (34) என்பதும், சென்னையில் கூலி வேலை செய்வதும், மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு வந்த அவா், சென்னை திரும்புகையில் பயணிகளின் உடைமைகளை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த ரூ.45 ஆயிரத்திலான சாய் சங்கரின் மடிக்கணினியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து உத்திரபிரபுவை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT