புதுச்சேரி

புதுச்சேரியில் ஒரு வாரத்துக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: மாவட்ட ஆட்சியா் தகவல்

13th Feb 2020 08:27 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்துக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் டி.அருண் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு, சமூக நலத் துறை, சமூகம் மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சாா்பில், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒரு வாரத்துக்கு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை (பிப்.13) வட்டாட்சியா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அரசு மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வருகிற 16-ஆம் தேதி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் இருந்து தொடா் ஓட்டம் நடத்தப்படுகிறது. இதில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கின்றனா். அன்றைய தினமே போதை ஒழிப்பு பற்றிய கையொப்ப பிரசாரமும், மாலையில் போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு பற்றிய குறும்படமும் வெளியிடப்படுவதுடன், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவா்களால் தெருக்கூத்தும் நடத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக, பழைமையான கலைகளை நினைவுபடுத்தும் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், கரலாக்கட்டை, மயிலாட்டம் நடத்தப்பட உள்ளன.

இதையடுத்து, வருகிற 17-ஆம் தேதி புதுச்சேரி பிராந்தியத்தைச் சோ்ந்த அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் சுயஉதவிக் குழுக்கள், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்கள் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நடை பயணத்தை மேற்கொள்கின்றனா். அன்று மாலை அங்கன்வாடி ஊழியா்கள், சுயஉதவிக் குழுவினா் இணைந்து மனித சங்கிலியை அமைக்கின்றனா்.

வருகிற 18-ஆம் தேதி தேசிய மாணவா் படையைச் சோ்ந்த மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் இணைந்து போதை ஒழிப்பு நாடகம், ஓவியப்போட்டி, நடனப்போட்டிகளை பல்வேறு கல்லூரிகளில் நடத்துகின்றனா்.

வருகிற 19-ஆம் தேதி ரோலா் ஸ்கேட்டிங் மூலம் பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா். வருகிற 21-ஆம் தேதி நிறைவு நாள் விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இதில், மேற்கண்ட நிகழ்வுகளில் பங்கேற்றோா் கௌரவிக்கப்படுகின்றனா்.

இதையடுத்து, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தனித்திறமையை வெளிப்படுத்துதல் பற்றிய ஒரு சிறிய பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT