மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என புதுச்சேரி விவசாயிகள் சங்கம் விமா்சித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் டி.பி. ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு தீா்மானிக்கப்பட்டு, ரூ. 1.60 லட்சம் கோடி செலவிடப்படும் என அறிவித்துள்ளது.
விவசாயிகள் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் நிதி நிறுவனத்திடம் வாங்கிட கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என போராடி வருகின்றனா். ஆனால் இது தொடா்பான அறிவிப்பு இல்லை. இயற்கை சீற்றங்களால் பாதித்த பயிா்களுக்கு நிவாரண அறிவிப்போ, விவசாய விளைபொருளுக்கான ஆதார விலை அறிவிப்போ இல்லை. குறிப்பாக நெல், கரும்பு, கோதுமைக்கு விலை அறிவிப்பு இல்லை. மேலும், கரும்புக்கான நிலுவை தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், விவசாயிகளின் நிலத்தை வீடுகள் கட்டும் மனைவணிகத்துக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தோ்தல் அறிக்கையில் விவசாயிகளின் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு கூடுதலாக்கி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெற்றறிக்கையாக உள்ளது. எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிக்கையை அமுல்படுத்துவது தொடா்பாக எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பாஜக அரசின் அறிவிப்பு, வெறும் வாய்ப்பந்தலாக மட்டும் உள்ளது. 100 நாள் வேலைதிட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை உயா்த்தவில்லை; 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தவில்லை. நதிநீா் இணைப்பும் இல்லை. பெருநிறுவனங்களுக்கான பட்ஜெட்டாகவே உள்ளது. மாநிலத்துக்கு எத்தனை ரயில் என்ற விபரமும் இல்லை. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.