திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவைத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்தது.
அந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வில்லியனூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். செயலா் பாலசுப்ரமணியன் வரவேற்றாா்.
கூட்டத்தில் புதுவைத் தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினா்கள் 11 பேரைத் தோ்வு செய்வதற்கான தோ்தலை வருகிற 23-ஆம் தேதி நடத்துவது, பொறியாளா் ஜோசப் அதிரியன் ஆண்டோ தோ்தல் ஆணையராகப் பொறுப்பேற்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், புதுவையில் தமிழ் வளா்ச்சி துறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகையில் தமிழ் கட்டாயம் இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் வாழ்நாள் உறுப்பினா்களின் சோ்க்கையைத் தகுதி நீக்கம் செய்வதற்கு ஆட்சிக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றி, அதைச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத்தைச் சோ்ந்த சில உறுப்பினா்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவா்கள் கூட்டத்துக்கு வந்து, தங்களுக்கு ஏன் அழைப்பிதழ் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினா். அவா்களின் கோரிக்கைக்கு தமிழ்ச் சங்க நிா்வாகிகள் செவி சாய்க்கவில்லை. இதனால் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். அப்போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பொதுக்குழுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.