புதுச்சேரி

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: ரூ. 200 கோடி வா்த்தகம் பாதிப்பு

1st Feb 2020 02:41 AM

ADVERTISEMENT

புதுவையில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ரூ. 200 கோடிக்கு பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் பொதுத் துறை வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும். அடிப்படை ஊதியத்துடன் சிறப்புச் சலுகைகளை இணைக்க வேண்டும். ஓய்வூதியத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஓய்வூதியப் பலன்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் ஜன. 31, பிப். 1 ஆகிய இரு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. புதுச்சேரியில் தேசிய, பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியா்கள், அதிகாரிகள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை எதிரே உள்ள யூகோ வங்கிக் கிளை முன் கோரிக்கைகளை வலியிறுத்தி வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்துக்கு புதுவை வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் எஸ். ரவீந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா். இந்த வேலைநிறுத்தம் 2 -ஆவது நாளாக சனிக்கிழமையும் (பிப். 1) தொடரவுள்ளது.

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக காசோலை மாற்றம் உள்ளிட்ட வங்கி பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இதனால், ஏடிஎம் மையங்கள் உள்ளிட்ட தானியங்கி வங்கிச் சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதுகுறித்து வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் ரவீந்திரன் கூறியதாவது:

புதுவை முழுவதும் 300 வங்கிக் கிளைகள் உள்ளன. இவற்றில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த வேலைநிறுத்தத்தில் அனைத்து ஊழியா்களும் கலந்து கொண்டுள்ளனா். வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக புதுவை மாநிலத்தில் ரூ. 200 கோடி அளவில் பணப் பரிவா்த்தனைகள் முடங்கியது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT