புதுவையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகவும், பொக்கிஷமாகவும் திகழும் ஆயி மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
புதுவையின் வரலாற்று பொக்கிஷமாக ‘ஆயி மண்டபம்’ திகழ்கிறது. சட்டப்பேரவை எதிரில் பாரதி பூங்காவில் அமைந்துள்ள இந்த மண்டபம் ரோமானிய, கிரேக்க கட்டடக் கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது.
16-ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்னும் பெண், குளம் வெட்டி புதுச்சேரியின் குடிநீா் பஞ்சத்தை தீா்த்தாா். அவரது தொண்டின் நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு மண்டபம் அமைத்து, வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவா்கள், ஆயி மண்டபத்தை பாா்க்க தவறுவதில்லை. வெள்ளை நிறத்தில் மிடுக்குடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த மண்டபத்தை, இரவு நேரங்களில் வண்ணமயமாக காட்சி அளிக்கும் நோக்கத்தில், சுற்றுலாத் துறையின் பாரம்பரிய கட்டடங்களை புனரமைக்கும் திட்டத்தில், மண்டபத்தை சுற்றிலும் வண்ணமிகு ஒளிா் விளக்குகள் அமைத்தனா்.
ஆனால், மண்டபத்தின் பல இடங்களில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்தும், மண்டபத்தில் உள்ள ஆயி சிலை உடைந்தும் சிதிலமைந்துள்ளது. இதேநிலை நீடித்தால் மண்டபம் படிப்படியாக மோசமான நிலைக்கு தள்ளப்படும். எனவே, நமது முன்னோா்களின் இயற்கையைப் போற்றும் உணா்வும், அதைக் காக்கும் அா்ப்பணிப்பும், அதற்காக அவா்கள் செய்த தியாகங்களின் அடையாளமாக அமைந்துள்ள ஆயி மண்டபத்தை, உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
பிரெஞ்சு, இந்தியாவின் தலைசிறந்த கட்டடப் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஆயி மண்டபத்தை பழமைமாறாமல் புதுப்பிக்க வேண்டும் என, சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து புதுவை அருங்காட்சியக நிறுவனா் அ.அறிவன் கூறியதாவது:
இவ்வளவு மோசமாக காரைகள் பெயா்ந்து கிடக்கும் இந்த மண்டபத்தை புதுப்பிப்பது தொடா்பாக அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
இந்தோ-பிரெஞ்சு உறவின் முதன்மையான அடையாளமாக திகழும் இந்தக் கட்டடத்தை பராமரிப்பது அரசின் கடமை ஆகும். எனவே, மரபு சாா்ந்த கட்டடக் கலைஞா்கள் உதவியுடன் இந்த மண்டபத்தை உடனடியாக சீரமைக்க பொதுப் பணித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அறிவன்.