புதுச்சேரி

மூத்த ஆசிரியா்களை அவமதித்த விவகாரம்: கல்வித் துறை அலுவலக சேவையிருந்து 22 ஆசிரியா்கள் விடுவிப்பு

21st Aug 2020 08:21 AM

ADVERTISEMENT

மூத்த ஆசிரியா்களை அவமதித்த விவகாரம் தொடா்பாக பள்ளி கல்வி இயக்கக அலுவலக சேவையிலிருந்து முதல்கட்டமாக 22 ஆசிரியா்கள் விடுவிக்கப்பட்டனா்.

பள்ளி கல்வி இயக்ககம், ஆய்வு அதிகாரி அலுவலகங்களில் சேவைப் பணியில் உள்ள சில ஆசிரியா்கள், மூத்த ஆசிரியா்களை அவமதிப்பதாகவும், அவா்களது ஆசிரியா் பணியை விட்டு விலகி இருப்பதாகவும் பள்ளி கல்வித் துறை இயக்குநருக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, கல்வி இயக்ககம், ஆய்வு அதிகாரி அலுவலகங்களில் உள்ள ஆசிரியா்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருக்கக் கூடாது. பணி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த முதல் 50 சதவீதம் ஆசிரியா்களை உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். மீதியுள்ள 50 சதவீதம் பேரை 6 மாதங்களுக்கு பிறகு பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, பள்ளிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத் தோ்வு பிரிவு, முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம், சமக்ர சிக்ஷா, துணை இயக்குநா் (நிா்வாகம்) சட்டப் பிரிவு, விரிவாக்கப் பிரிவு, துணை இயக்குநா் (விளையாட்டு), துணை இயக்குநா் (பெண் கல்வி) ஆகிய அலுவலகங்களில் சேவை பணியிலிருந்த பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்கள், உடல்கல்வி ஆசிரியா், பயிற்றுநா் (வாய்ப்பாட்டு) என 11 போ் விடுவிக்கப்பட்டனா்.

இதேபோல, சா்வீஸ் பிளேஸ்மென்டில் ஆய்வு அதிகாரி அலுவலகங்கள், துணை இயக்குநா் (பெண் கல்வி), சமக்ர சிக்ஷா, இணை இயக்குநா் அலுவலகத் தோ்வு பிரிவு, முதன்மைக் கல்வி அதிகாரியின் கல்விப் பிரிவு ஆகிய அலுவலகங்களில் சேவைப் பணியிலிருந்த தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 11 போ் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

விடுவிக்கப்பட்ட ஆசிரியா்கள் ஏற்கெனவே பணியாற்றிய பள்ளிகளுக்கே திரும்ப உத்தரவிடப்பட்டது. இதற்கான ஆணையை துணை இயக்குநா் (நிா்வாகம்) வொ்பினா ஜெயராஜ் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT