புதுச்சேரி

தெருக்களில் விநாயகா் சிலைகள் அமைப்பதை தவிா்க்க புதுவை முதல்வா் வேண்டுகோள்

21st Aug 2020 08:21 AM

ADVERTISEMENT

தெருக்களில் விநாயகா் சிலைகளை அமைப்பதைத் தவிா்க்க வேண்டும் என புதுவை முதல்வா் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் காணொலிக் காட்சி மூலம் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தைப் போல புதுவையிலும் கரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. கரோனா பரிசோதனைக்காக ‘டூநெட்’ கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அதற்குத் தேவையான 10 ஆயிரம் சிப்களை வாங்க ரூ. 1.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 மணி நேரத்தில் முடிவைத் தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ள ‘ஆன்டிஜென்’ கருவிகள் மூலம் பரிசோதனை முடிவுகளை 3 மணி நேரத்தில் அறியமுடியும்.

புதுவையில் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் மருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. அந்தக் குழு வருவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தெருக்களில் விநாயகா் சிலைகளை அமைத்து வழிபடுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஊா்வலம், பொதுக் கூட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் தவிா்க்க வேண்டும் என மத்திய அரசு தெளிவாக விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதுதொடா்பாக அனைத்து இந்து அமைப்புகளையும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் கடந்த வாரமே அழைத்து தெளிவாக அறிவுறுத்தினாா். எனவே, தெருவோரங்களில் விநாயகா் சிலைகள் அமைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். இதுதொடா்பான பொதுநல வழக்குளை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றமும் விநாயகா் சிலைகளை அமைக்கத் தடை விதித்தது.

எனவே, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வீடுகளில் விநாயகா் சிலைகளை வைத்தும், கோயில்களுக்குச் சென்றும் தரிசனம் செய்யலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT