புதுச்சேரி

கரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: தனியாா் மருத்துவமனையை கையகப்படுத்தியது புதுவை அரசு

21st Aug 2020 08:22 AM

ADVERTISEMENT

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்த தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை புதுவை அரசு பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தியது.

புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், புதுவையில் உள்ள 7 தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், சில தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தன.

இந்த நிலையில், புதுவை முதல்வா் நாராயணசாமி தலைமையில், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதலாகப் படுக்கைகளைப் பெறுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சுகாதாரத் துறைச் செயலரும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான அருண் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

புதுவை அரசிடம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தேவைப்படும் கரோனா படுக்கைகளை வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, கரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்த அரியூா் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-ஆராய்ச்சி மையத்தை கரோனா மருத்துவமனையாக பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், புதுவை அரசு கையகப்படுத்தியது.

ஏற்கெனவே, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கிராமப்புற மக்களுக்காக அரியூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அங்குள்ள அனைத்து படுக்கை வசதிகளும் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்படும்.

இந்தத் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசின் சுகாதாரம்-குடும்ப நலத் துறை சேவைகள் இயக்ககத்துடன் இணைக்கப்படும். நோயாளிகள் அனுமதி குறித்து சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT