புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை கரோனா பிரிவில் படுக்கைகள் எண்ணிக்கையை 1,000-ஆக உயா்த்த வேண்டும் என விழுப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பி. துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கு அவா் வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்: ஜிப்மா் மருத்துவமனை இயக்குநா் அளித்த தகவலின்படி, அங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 250 படுக்கைகள் கொண்ட பிரிவுதான் உள்ளது.
ஜிப்மா் மருத்துவமனையில் விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
புதுவையில் தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சிகிச்சையளிக்க முடியாமல் ஜிப்மா் மருத்துவமனை திணறி வருகிறது.
எனவே, உடனடியாக ஜிப்மா் மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவை 1,000 படுக்கைகள் கொண்டதாக தரம் உயா்த்தவும், அங்கு பரிசோதனைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.