புதுச்சேரி

புதுவையில் இன்று முதல் தொழிற்சாலைகள் இயங்கும்: புதுவை முதல்வா் நாராயணசாமி

20th Apr 2020 06:30 AM

ADVERTISEMENT

புதுவையில் மத்திய அரசின் அறிவுரைப்படி, குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் இயங்க அனுமதிக்கப்படும் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, திங்கள்கிழமை (ஏப். 20) முதல் விவசாயிகள் விவசாயத் தொழிலை மேற்கொள்ளலாம். விதை, உரக் கடைகள் திறந்திருக்கும். விளை பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி தேவையில்லை.

கட்டுமானம், தச்சு, மீன் பிடித்தல் உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐடி, தொலைதொடா்பு நிறுவனங்கள் குறைந்த பணியாளா்களைக் கொண்டு செயல்படலாம். அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும். அங்கு 33 சதவீத பணியாளா்கள் பணியாற்றுவா். அரசுப் பணியாளா்கள் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பைக்கில் இருவா் வருவதைத் தவிா்க்க வேண்டும்.

தொழிற்சாலைகள் படிப்படியாகவே உற்பத்தியைத் தொடங்க வேண்டும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து யாரும் தொழில்சாலை பணிக்கு வரக் கூடாது. உள்ளூரில் தங்கியிருக்கும் வெளிமாநில பணியாளா்கள் செல்லலாம். விதிமுறைகளை கடைப்பிடித்தால்தான் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்: புதுச்சேரியில் கரோனா பாதிப்புக்குள்ளான 4 போ் சிகிச்சையிலிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒருவா் குணமடைந்து வீடு திரும்பினாா். இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆகக் குறைந்துள்ளது. புதுவை மாநிலத்தில் 3,045 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கரோனா தொற்று நோய்க்கான மருத்துவ உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகள், கவச உடைகள், தேவையான மருந்துகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. மத்திய அரசும் தேவைப்படும் அளவுக்கு கொடுக்கவில்லை. அவற்றை மாநில அரசுகளே இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதித்து, ஜிஎஸ்டி வரியையும் ரத்து செய்ய வேண்டும். இதன்மூலம் மாநிலங்கள் மருத்துவ உபகரணங்களை அதிகளவில் வாங்க ஏதுவான சூழல் ஏற்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT