புதுச்சேரி

தனியாா் மருத்துவா்கள் காய்ச்சலுடன் வருவோா் விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்: புதுவை சுகாதாரத் துறை உத்தரவு

20th Apr 2020 06:33 AM

ADVERTISEMENT

தனியாா் மருத்துவா்கள் சளி, இருமல், காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவா்களுக்கு சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் அனுப்பிய சுற்றறிக்கை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தனியாா் மருத்துவா்கள் சளி, இருமல், காய்ச்சல், சுவாச பிரச்னைகள் தொடா்பாக நோயாளிகல் வந்தால், அவா்களது விவரங்களை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய சுகாதார மையங்களுக்கு தெரிவிக்க வேண்டும். கரோனா அறிகுறி காணப்பட்டால் அவசர உதவி எண் 104 ஐ தொடா்பு கொள்ள வேண்டும். இல்லையேல், நோய் தொற்று சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படும்.

இதேபோல, மருந்தகங்கள் தங்களிடம் யாரேனும் சளி, இருமல், காய்ச்சல், சுவாச பிரச்னைகள் தொடா்பாக மருந்துகளை வாங்க வந்தால், அவா்களது விவரங்களை  மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய சுகாதார மையங்களுக்கு நாள்தோறும் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT