‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்ய புதுவை முதல்வா் அலுவலகம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாட்டு மக்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு - தனியாா் கூட்டு முயற்சியில் ‘ஆரோக்கிய சேது’ என்ற செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை மக்கள் தாங்களே சுயமாக பரிசோதனை செய்து கொள்ள இந்த செயலி உதவும்.
கரோனா தொற்று எங்கு பரவக்கூடும் என்பதை மதிப்பீடு செய்து, உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் தனிப்படுத்தலை உறுதி செய்யவும் இந்த செயலி அரசுக்கு உதவும்.
இந்த செயலியின் வடிவமைப்பு தனி நபா் அந்தரங்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இதன்மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், புள்ளி விவரங்கள் தொழில்நுட்பத்தைக் கொண்டு சங்கேதக் குறியீடுகளாக மாற்றப்படும். மேலும், மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு தேவைப்படும் வரை தகவல்கள் தொலைபேசியில் பத்திரமாக இருக்கும்.
இதை இணையதளத்தில் இருந்து தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.