புதுச்சேரி: தமிழகத்தைப் பின்பற்றி புதுவையிலும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என முதல்வா் வே. நாராயணசாமி உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் இதுவரை 4 போ் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிா்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வீடுகளில் 3000-க்கும் மேற்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். காரைக்கால், மாஹே, ஏனாமில் கரோனா பாதிப்பு இல்லை.
புதுச்சேரியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் திறந்து வைத்திருக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதனை மீறி பலா் வேண்டுமென்றே ஊா் சுற்றி வருகின்றனா். மேலும், தமிழகத்திலிருந்து பலரும் புதுவைக்கு வருகின்றனா். இதன் காரணமாக, புதுவையில் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தைப் பின்பற்றி, புதுவையிலும் செவ்வாய்க்கிழமை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். அதன் பிறகு மருந்து கடைகள் மட்டும் திறந்திருக்கும். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா நிவாரண நிதிக்கு இதுவரை சுமாா் ரூ. 5 கோடி நிதியை அரசு ஊழியா்கள், பொதுமக்களும் கொடுத்துள்ளனா். மக்கள் தாராளமாக மனமுவந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவிட வேண்டும். புதுவை மக்களுக்கு, மாநில நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2000 வழங்கினோம்.
மத்திய அரசு, பேரிடா் மீட்பு துறையின் மூலமாக பல மாநிலங்களுக்கு நிதி வழங்கியுள்ளது. ஆனால், இதுவரை புதுவை மாநிலத்துக்குத் தேவையான நிதி வழங்கவில்லை. புதுவைக்கு இடைக்கால நிதியாக ரூ. 995 கோடி வழங்க வேண்டும் என பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் வரவில்லை.
மத்திய அரசு, புதுவைக்கு வழங்க வேண்டிய சரக்கு- சேவை வரிக்கான சுமாா் ரூ. 400 கோடியை கொடுக்கவில்லை. மானியம் கொடுக்கவில்லை. மத்திய அரசு, நமது மாநிலத்துக்கு ஒதுக்கிய பட்ஜெட் தொகையும் வரவில்லை. வியாபார நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், கடைகள் மூடியிருப்பதால் புதுவை அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் வரவில்லை. ஆனால், மாநில அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக புதுவை அரசுக்கு ரூ. 995 கோடியை வழங்க வேண்டும் என மறு கடிதம், பிரதமருக்கு திங்கள்கிழமை எழுதவுள்ளேன். பிரதமா் அதற்கு செவி சாய்ப்பாா் என நம்புகிறேன்.
கரோனா ஊரடங்கால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிவரும் நாள்கள் சோதனையான காலகட்டமாகும். கரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை உயா்ந்து வரும் நிலையில், மக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா் முதல்வா் வே. நாராயணசாமி.