புதுச்சேரி

காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல்: அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதி

22nd Sep 2019 05:08 AM

ADVERTISEMENT


புதுவை காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு வருகிற அக்டோபர் 21 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக புதுவை கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி எல்.குமார் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வெ.வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜிநாமா செய்ததால், காமராஜர் நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள நான்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், புதுவை காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வருகிற அக்டோபர் 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
இதுதொடர்பாக புதுவை கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி எல். குமார் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
இந்திய தேர்தல் ஆணையம் காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 23 -ஆம் தேதியும், வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 30-ஆம் தேதியும், வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ஆம் தேதியும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் அக்டோபர் 3-ஆம் தேதியும், இடைத் தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 -இல் நடைபெறுகிது. தேர்தல் நடைமுறை அக்டோபர் 27- ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
35,325 வாக்காளர்கள்: 1.1.2019 -ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 26.3.2019 அன்று வெளியிடப்பட்டது. 
அதன்படி, காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 17,216 ஆண் வாக்காளர்கள், 18,097 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 35,325 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதி அமல்: தேர்தலையொட்டி, புதுச்சேரி பிரதேசத்தில் மட்டும் சனிக்கிழமை (செப். 21) முதல் மாதிரி நன்னடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடைமுறை நிறைவு பெறும் தேதி வரை இது அமலில் இருக்கும். காமராஜர் நகர் தொகுதியில் 3 பறக்கும் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளது. பதற்றமான வாக்குச் சாவடிகள் தற்போது வரை கண்டறியப்படவில்லை. நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் எதுவும் பாதிக்கப்படாது என்றார் அவர்.
துணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி தில்லைவேல், ஆட்சியர் (பொ) சஷ்வத் செளரவ் ஆகியோர் உடனிருந்தனர்.
இரு முறை வென்ற வைத்திலிங்கம்
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, கடந்த 2011 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT