லாசுப்பேட்டை தொகுதியில் புதிதாக அங்கன்வாடியைக் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை பேரவைத் தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான வே.பொ.சிவக்கொழுந்து திங்கள்கிவமை தொடக்கிவைத்தார்.
புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதி பெத்துசெட்டிப்பேட்டை குளக்கரை வீதியில் உள்ள பயன்படாத பழைய கழிப்பிடக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்
பெறும் வகையில், அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களின் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், புதுச்சேரி கூட்டுறவு கட்டட மையம் மூலம் ரூ. 12 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமான பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, பணியைத் தொடக்கி வைத்தார். கூட்டுறவுக் கட்டட மைய நிர்வாக இயக்குநர் கோவிந்த நாயுடு, உதவித் திட்டப் பொறியாளர் ரவி, உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.