புதுச்சேரி

எம்.எல்.ஏ. நடனம் ஆடியதாக விடியோ வெளியீடு: போலீஸார் விசாரணை

17th Sep 2019 10:24 AM

ADVERTISEMENT

பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு நடனம் ஆடியதாக வெளியான விடியோ தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தனவேலு. இவரைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடிய விடியோவை, தனவேலு எம்.எல்.ஏ. நடனம் ஆடியதாகக் குறிப்பிட்டு, ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளத்தில் மர்ம நபர்கள் பதிவிட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனவேலு எம்.எல்.ஏ. சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.
தகவலறிந்த அவரது ஆதரவாளர்கள் கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த தெற்கு எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். 
இதனிடையே, இதுதொடர்பாக தனவேலு எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் கன்னியக்கோவில் மாரியம்மன் வீதியைச் சேர்ந்த ராஜா (எ) ஐயப்பன் (32) ஞாயிற்றுக்கிழமை இரவு பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன் பேரில், விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மர்ம நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT