புதுச்சேரி

மருத்துவப் படிப்பில் மோசடியாகச் சேர முயற்சி: தமிழக மாணவியின் தந்தைக்கு ஜிப்மர் நோட்டீஸ்

10th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மோசடியாகச் சேர முயன்றதாக தமிழக மாணவியின் தந்தையிடம் ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் நிகழாண்டு சேர்க்கை பெற்றார். இந்த முறைகேடு தொடர்பாக பெற்றோர் - மாணவர்கள் நலச் சங்கம் புகார் அளித்ததால், இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கைப் பெற்ற 54 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், மாணவி கிருத்திகா, தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் இரு முகவரி பதிவில் மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வில் பங்கேற்றது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வருவாய்த் துறைச் செயலர் உத்தரவின் பேரில், விசாரணை நடைபெற்றது. கோரிமேடு காவல் நிலையத்திலும் சமூக நல அமைப்புகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக முறைகேட்டில் சிக்கிய மாணவி கிருத்திகாவின் தந்தை குமாரிடம் விளக்கம் 
கேட்டு ஜிப்மர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. 
ஜிப்மர் நிர்வாகத்தின் இந்த தாமதமான நடவடிக்கையால் அந்த இடத்தில் மற்றொரு மாணவர் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை பெற்றோர் - மாணவர்கள் நலச் சங்கத் தலைவர் வை.பாலா கூறியதாவது:
 மாணவி கிருத்திகா மீது புகார் அளித்து 2 மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது. இதில், முதல் குற்றவாளி வருவாய்த் துறை. 
தற்போது இந்த முறைகேட்டின் மீது காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவரின் மருத்துவப் படிப்பு பறிக்கப்பட்டுள்ளது.
எனவே, போலிச் சான்றிதழ் அளித்த அதிகாரி உள்ளிட்ட ஒவ்வொருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT