புதுச்சேரி

பொம்மை உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

10th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். இதில், திரளான பொம்மை உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொம்மைகளுடன் பங்கேற்றனர்.
புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உறுப்பினர்களிடம் ரூ. 5 ஆயிரம் கட்டணம் வசூலித்து, ஈஸ்வரன் கோயிலில் பொம்மைகள் கண்காட்சி நடத்துவதைக் கண்டித்தும், 
இந்தக் கண்காட்சியை இலவசமாக நடத்தக் கோரியும், நுகர்வோர் மற்றும் சங்கத்துக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்குவதை நிறுத்தி, 15 சதவீத தள்ளுபடியில் பொம்மைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கக் கோரியும், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சங்கத்தின் பெயரில் நடைபெறும் விற்பனை மூலம் திரட்டப்படும் ரூ. 2.50 லட்சத்துக்கு கணக்கு காட்ட வலியுறுத்தியும் பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடந்த 6- ஆம் தேதி ஈஸ்வரன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த தற்போதைய சங்கத் தலைவர் ரங்கராஜன் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார். 
ஆனால், இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 
இதைக் கண்டித்தும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வலியுறுத்தியும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொம்மை உற்பத்தியாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT