புதுச்சேரி

விதை நெல் வழங்காததைக் கண்டித்து பாகூர் வேளாண் அலுவலகம் முற்றுகை

7th Sep 2019 08:52 AM

ADVERTISEMENT

விதை நெல் வழங்காததைக் கண்டித்து, பாகூர் வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி பாகூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாசிக் நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் நெல் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 
அண்மைக் காலமாக பாசிக் நிறுவனம் முடங்கியதால், இந்தப் பணிகள் தற்போது தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாகூர் உள்ளிட்ட 24 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நடப்பு சம்பா பருவத்துக்குத் தேவையான பொன்னி, பாப்பட்லா உள்ளிட்ட விதை நெற்களை மானிய விலையில் வாங்க வேளாண்மை அலுவலர்கள் உரிமம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விதை நெல் விநியோகம் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜூலை மாதம் வழங்கப்பட்ட உரிமத்துக்கு இதுவரை விதை நெல் வழங்கப்படமால் அலைக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், விதை நெல்லை வழங்கக் கோரி, பாகூர் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மானிய விலை விதை நெல்லை வழங்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். உரிய காலத்துக்குள் நெல்லை விதைக்கவில்லை எனில், சாகுபடி பாதிக்கப்படும். எனவே, உடனடியாக விதை நெல்லை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT