புதுச்சேரி

புதுச்சேரி கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

7th Sep 2019 08:49 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியன்று புதுச்சேரி நகரில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, புதுச்சேரி கடலில் கரைக்கப்பட்டன.
புதுச்சேரி முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2- ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், சாரம் அவ்வைத் திடலில் 21 அடி உயரத்தில் பிரம்மாண்ட வலம்புரி விநாயகர் சிலை வைக்கப்பட்டு, கடந்த 5 நாள்களாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதேபோல, அங்காளம்மன் நகரில் 20 அடியிலும், தவளக்குப்பத்தில் 12 அடியிலும், பெரியார் நகர், வைத்திக்குப்பம், ஹவுசிங் போர்டு, ஜவகர் நகர்,  வாழைக்குளம், வில்லியனூர், ராஜீவ் காந்தி நகர், தந்திராயன்குப்பம் ஆகிய பகுதிகளில் 12 அடியிலும், வி.பி. சிங் நகர், பாலாஜி திரையரங்கம் அருகில், கொசக்கடை வீதி உள்ளிட்ட இடங்களில் 10 அடியிலும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
புதுவை முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள், ஆட்டோ, வேன் ஸ்டேண்டுகள், மார்க்கெட் வியாபாரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
இதேபோல, வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 
4 -ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புதுச்சேரி அவ்வைத் திடலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளும் ஊர்வலமாக நேரு வீதி சந்திப்பிலிருந்து மகாத்மா காந்தி வீதி, சர்தார் வல்லபபாய் பட்டேல் வீதி வழியாக மேள், தாளங்களுடன் புதுச்சேரி கடற்கரைச் சாலை பழைய நீதிமன்றம் அருகே கொண்டு வரப்பட்டன.  அங்கு, பூஜைகள் செய்யப்பட்டு, சிலைகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. நிகழ்வில் மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன், இந்து முன்னணி தலைவர் சனில்குமார், விநாயகர் சதுர்த்தி பேரவை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல, வம்பாகீரப்பாளையம், காலாப்பட்டு, நல்லவாடு, வீராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள கடலில் கரைக்கப்பட்டன.
புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி, சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததுடன், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT