புதுச்சேரி

இலவச அரிசியை தொடர்ந்து வழங்க வேண்டும்: புதுவை பேரவையில் தீர்மானம்

7th Sep 2019 08:49 AM

ADVERTISEMENT

இலவச அரிசியைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என புதுவை சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி  நேரத்தின் போது, மாஹே சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் இலவச அரிசி வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.  அப்போது, நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் கந்தசாமி, இலவச அரிசியை வழங்குவது முக்கிய பிரச்னையாக உள்ளதால், வெள்ளிக்கிழமை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து பேச பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது, அதிமுக உறுப்பினர் அன்பழகன் ஆளுநரை சந்திப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, அதனால் நாங்கள் வரமாட்டோம்.  அனைவருக்கும் 
இலவச அரிசியை வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், அதிமுகவும் ஆதரிக்கும் என்றார்.
இதையேற்று முதல்வர் நாராயணசாமி புதுவை பேரவையில் உடனடி கேள்வி நேரத்துக்குப் பிறகு இலவச அரிசி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்து பேசியதாவது:
இலவச அரிசி வழங்குவது புதுவை அரசின் முக்கிய நலத் திட்டங்களில் ஒன்று. முதலில் அனைத்து குடும்பத்தினருக்கும் 20 கிலோ அரிசியும்,  பின்னர் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு  20 கிலோவும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோவும் இலவச அரிசி வழங்கப்பட்டது.
ஆளுநர் கிரண் பேடி, அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்க வேண்டும் என்று கூறியதால், கிலோவுக்கு ரூ. 30 வீதம் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு 600 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 300 ரூபாயும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அரிசியின் விலை உயர்ந்து வருவதாலும், அரிசிக்கு வழங்கப்படும் பணத்தை வீண் செலவு செய்து விடுவதாலும், மக்கள் அரிசியையே வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, கடந்த 7.6.2019 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், தொடர்ந்து இலவச அரிசியை வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.
அப்போது பேசிய அதிமுக குழுத் தலைவர் அன்பழகன், அரிசியை வழங்காவிட்டால் அதற்குரிய பணம் 10 நாள்களுக்குள் பொதுமக்களுக்கு தரப்படும் என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன், இலவச அரிசி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்தார் என்றார். 
இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயபால், செல்வம் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
இதனால், பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்த பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, இலவச அரிசி வழங்குவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT