புதுச்சேரி

இலவச அரிசியில் கமிஷன் பெறுவதாகக் கூறிய நியமன எம்எல்ஏ மீது நீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் கந்தசாமி

7th Sep 2019 08:53 AM

ADVERTISEMENT

இலவச அரிசி கொள்முதலில் கமிஷன் பெறுவதாக புகார் தெரிவித்த நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
புதுவை பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:
ஆ.அன்பழகன் அதிமுக குழுத் தலைவர்): புதுவை மக்களுக்கு எத்தனை மாதங்களுக்கு இலவச அரிசியும், அரிசிக்குப் பதிலாக பணமும் வழங்கப்பட்டது? இந்த மாதம் வழங்கப்படும் இலவச அரிசி ஒரு கிலோ என்ன விலைக்கு  வாங்கப்படுகிறது?
முதல்வர் நாராயணசாமி: 17 மாதங்கள் அரிசியும், 5 மாதங்களுக்கு பணமும் வழங்கப்பட்டன. புதுவையில் ரூ. 32-க்கும்,  காரைக்காலுக்கு ரூ. 32.70-க்கும், ஏனாமில் ரூ. 32.81-க்கும் ஒரு கிலோ அரிசி வாங்கப்படுகிறது.  மாஹேவில் தற்போது இலவச அரிசி  விநியோகம் இல்லை.
அமைச்சர் கந்தசாமி: நீதிமன்றத் தீர்ப்பை ஆளுநர் மதிக்கவில்லை. தீர்ப்புக்குப் பின்னரும் அனைத்துக் கோப்புகளையும் செயலரும், தலைமைச் செயலரும் ஆளுநருக்கு அனுப்புகின்றனர்.
அன்பழகன்: இலவச அரிசி வழங்கப்படாத மாதங்களுக்கு ரூ. 9 ஆயிரம் தர வேண்டும்.  தருவீர்களா?
அமைச்சர் கந்தசாமி: கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில்கூட பல மாதங்கள் அரிசி வழங்கப்படவில்லை. நீங்கள் அந்தக் கூட்டணி அரசில்தான் அங்கம் வகித்தீர்கள். இதுகுறித்து கேட்டீர்களா?
அன்பழகன்: நாங்கள் கூட்டணியில் இல்லை. நீங்களும், அமைச்சர் மல்லாடியும்தான் ரங்கசாமியுடன் நட்புடன் இருந்தீர்கள். தரமற்ற அரிசி என திருப்பி அனுப்பிய பிறகு, அதற்குக் காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
அமைச்சர் கந்தசாமி: சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கே.ஜி.சங்கர் (நியமன எம்எல்ஏ): தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. ஊழல் கண்காணிப்புக் குழு விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார்.
தீப்பாய்ந்தான் (காங்கிரஸ் எம்எல்ஏ): அரிசியை ஆய்வு செய்து, தரமற்றதாக இருந்தால் திருப்பி அனுப்புவதுதான் முறை.
சாமிநாதன் (நியமன எம்எல்ஏ): ஒரு கிலோ அரிசிக்கு ரூ. 2 கமிஷன் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் கந்தசாமி: பொய்யான குற்றச்சாட்டைக் கூறியதற்காக நியமன உறுப்பினர் சாமிநாதன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடருவேன்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்: தரமற்ற அரிசியாக இருந்தால் பணம் தராமல் திருப்பி அனுப்பி, ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் ஆளுநருக்கு ஆதரவாகப் பேசி அவரை உயர்த்த வேண்டாம். ஆளுநரை உயர்த்திப் பேசுவதால், புதுவை தாழ்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT