புதுச்சேரி

புதுவை அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் கைது

4th Sep 2019 10:05 AM

ADVERTISEMENT

புதுவை மாநில அமைச்சர் கந்தசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
புதுவை சமூக நலத் துறை அமைச்சராக இருப்பவர் மு.கந்தசாமி. இவரது வீட்டுக்கு மர்ம நபர் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடித்தார். 
இதையடுத்து, முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம் பகுதிகளில் உள்ள அமைச்சர் கந்தசாமியின் வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், அமைச்சரின் வீடுகளில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரின் செல்லிடப்பேசி எண் மூலம் அவரை போலீஸார் அடையாளம் கண்டனர். 
அதன்படி, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கூனிமேடு நம்பிக்கை நகரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மகன் புவனேஷ்வரை (21) திங்கள்கிழமை இரவு முதலியார்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், அவர் ஏற்கெனவே புதுவை முதல்வராக இருந்த ரங்கசாமி, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படாமல் விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, புவனேஷ்வரை முதலியார்பேட்டை போலீஸார் கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புவனேஷ்வரை சிறையில் அடைக்காமல் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவருக்கு பெற்றோரின் துணையுடன் மனநல சிகிச்சை அளிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார். 
இதையடுத்து போலீஸார், அந்த இளைஞரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT