புதுச்சேரி

புதுவையில் கேசினோ திட்டம் விரைவில் கொண்டுவரப்படும்: சட்டப் பேரவையில் முதல்வர் தகவல்

4th Sep 2019 10:06 AM

ADVERTISEMENT

புதுவையில் கேசினோ (கப்பலில் நடத்தப்படும் மனமகிழ் மன்றம்) திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று புதுவை சட்டப் பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, முதல்வர் நாராயணசாமி பதில் அளித்துப் பேசியதாவது:
அன்றாட அரசு நிகழ்வுகளில் எப்படி புதுவைக்கு இடையூறு இருக்கிறது  என்பதையெல்லாம் தாண்டி மாநிலத்தின் மக்கள் நலனை கருத்தில் கொண்டு,  மத்திய அரசை தொடர்ந்து அணுகி, நிதி ஆதாரத்தை பெருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்ததன் பலனாகவும், அரசின் வருவாயை பெருக்கியதன் காரணமாகவும்தான் ரூ.8,425 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிந்தது.
கடந்த ஆண்டு பட்ஜெட் ரூ.7,530 கோடி. நிகழாண்டு ஆயிரம் கோடி வருமானத்தை பெருக்கி திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு 42 சதவீதம் நிதியுதவி அளிக்கும் மத்திய அரசு, புதுவைக்கு 26 சதவீதம்தான் கொடுக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவை பரிந்துரைத்து, அதை நிறைவேற்றும் போது, புதுவைக்கு கிடைக்க வேண்டிய நிதி கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டுக்கான மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி 60 
சதவீதம் கிடைத்தது. மார்ச் மாதத்தில் நிதி வந்ததால், அதை முழுமையாக செலவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும், புதுவையின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீமாக உள்ளது. விவசாயத்தில் தேசிய அளவிலான வளர்ச்சி 3 சதவீதமாக இருந்த நிலையில், புதுவையின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கிறது.
இலவச அரிசி கொடுப்பது தான் அரசின் திட்டம். அதற்காக, நிகழாண்டுக்கான முழுமையான தொகை ரூ.160 கோடியை ஒதுக்கியுள்ளோம். இடையூறுகளையும் மீறி அரிசி வழங்கும் திட்டத்துக்காக 6 மாதங்களுக்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைக்கும்.
புதுவை மாநில அரசு பல துறைகளில் தேசிய விருது பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் அதிகளவு மாணவர்களை சேர்ப்பதற்கான திட்டத்தை கல்வி அமைச்சர் கொண்டுவர இருக்கிறார்.
விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் புதுவையில் உள்ளனர். அவர்களுக்கு விளையாட்டுத் துறை மூலமாக மட்டுமன்றி, முதல்வர் நிதியில் இருந்து பணமுடிப்பு, சான்றிதழ், கல்வி அமைச்சர், விளையாட்டு அமைச்சர் சான்றிதழ் போன்றவை அளித்து கெளரவித்து வருகிறோம். இதனால் அவர்கள் அகில இந்திய அளவில் விளையாட்டுகளில் பங்கேற்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.
எந்தச் சூழ்நிலையிலும் ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற துறைக்கு மாற்ற மாட்டோம். அதனால்தான், வரவு செலவு திட்டத்தில் 95 சதவீதம் செலவிட்டுள்ளோம். உயர் கல்வியில் மேம்பட வேண்டும் என்பதற்காக, பொறியியல் பல்கலைக்கழகம், விவசாயம் மற்றும் கால்நடை பல்கலைக்கழகம், சட்ட பல்கலைக்கழகம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன. கலைக் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியை ஒருங்கிணைத்து ஒரு பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாலைகளை செப்பனிட அதிக நிதி ஒதுக்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
புதுவையில் கேசினோ திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம். அது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். புதுவை மாநிலத்தில் வருவாயை அதிளவில் பெருக்குவதற்கான வழி இல்லை. மக்கள் மீது அதிக சுமையை ஏற்ற முடியாது. ஆனால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்காக, எந்தெந்த துறைகளில் வருவாயை பெருக்க முடியுமோ, அவற்றில் பெருக்க நடவடிக்கை எடுக்கிறோம். இருக்கின்ற நிதி ஆதாரத்தை வைத்து எல்லா துறைகளுக்கும் பாரபட்சம் இன்றி நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT