புதுச்சேரி

புதுச்சேரியில் ரெளடி வெட்டிக் கொலை

4th Sep 2019 10:04 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் திங்கள்கிழமை இரவு ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி வாணரப்பேட்டை காளியம்மன் கோயில் தோப்பு எல்லையம்மன் கோயில் வீதி 4-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சாணிகுமார் (45). ரெளடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில், ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாணிகுமார், அண்மையில் தண்டனைக் காலம் முடிந்தும் தனக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதி, வீட்டுக்கு வராமல் வெளியூரில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அவரது வீட்டின் அருகிலுள்ள எல்லை காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க சாணிகுமார் தனது கூட்டாளிகளுடன் வந்திருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், சாணிகுமாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், வெடிகுண்டுகள் குறி தப்பி கோயில் சுவற்றில் விழுந்து பயங்கர சப்தத்துடன் வெடித்தன. இதன் காரணமாக, விழாவுக்கு வந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த ரெளடி சாணிகுமார், தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பிவிட்டார். வெடிகுண்டு வீசிய மர்ம கும்பலும் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
தொடர்ந்து, கோயில் விழா முடிந்ததும் நள்ளிரவு சாணிகுமார் தனது வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, வீட்டினருகில் அவரை எதிர்பார்த்து காத்திருந்த 6-க்கும் மேற்பட்டோரைக் கொண்ட கும்பல், சாணிகுமாரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே இறந்தார். சாணிகுமார் இறந்ததை உறுதி செய்த பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை காலை தகவலறிந்து அங்கு வந்த முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையிலான முதலியார்பேட்டை போலீஸார், சாணிகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும், வாணரப்பேட்டையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT