புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை

4th Sep 2019 10:05 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் இருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி உறுதி அளித்தார்.
புதுவை சட்டப் பேரவையில் 
செவ்வாய்க்கிழமை உடனடி கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:
புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் பிச்சைக்காரர்கள் அதிகமாக சாலைகளில் சுற்றி வருகின்றனர். பல மாநிலங்களிலிருந்து மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண் பார்வையற்றவர்கள் உள்ளிட்டோரை ரயிலில் ஏற்றி புதுச்சேரிக்கு அனுப்பி விடுகின்றனர்.
கடைசியாக ரயில் வந்து நிற்கும் இடமாக புதுச்சேரி உள்ளதால், இங்கு வந்து இறங்கும் அவர்களில் பெரும்பாலோர் வீதியில் இறங்கி பிச்சை எடுத்து சுற்றித்திரிகின்றனர். அவர்களால் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் ஏற்படுகின்றன.
எனவே, புதுவை அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கும் நடவடிக்கை மனிதாபிமானம் உள்ளதாக இருக்க வேண்டும். அவர்களின் விலாசத்தை அறிந்து மறுபடியும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
புதுச்சேரியை சேர்ந்தவர்களாக இருந்தால், மத்திய அரசின் நிதி உதவி பெற்று முதியோர் காப்பகம், மனநோயாளிகள் காப்பகம் நடத்துபவர்கள், அவர்களை மீட்டு பாதுகாக்க வேண்டும். மேலும், சமூகத் நலத் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: நீண்ட தூர ரயில்களில் மனநோயாளிகளை ஏற்றி புதுச்சேரிக்கு அனுப்பிவிடுகின்றனர். 
அவர்களை புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அமைச்சர் கந்தசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கெனவே, தமிழக முதல்வர் வீடு மற்றும் எனது வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தவர்தான். 
அவர் மனநோயாளியாக இருந்தாலும், அவர் ஏற்கெனவே தமிழக, புதுவை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 3 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். அவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT