புதுச்சேரி

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு முன்னுரிமை: திமுக கோரிக்கை

4th Sep 2019 10:05 AM

ADVERTISEMENT

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப் பேரவையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. இரா.சிவா வலியுறுத்தினார்.
புதுவை சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிப்பர். அதனால் கேள்வி நேரத்தில் தொகுதி பிரச்னைகள், மாநில பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அமைச்சர்களிடம் விளக்கம் பெறுவர்.
எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பியதன் காரணமாகவே, அமைச்சர்களும், அதிகாரிகளும் தொகுதிகளில் உள்ள சில பிரச்னைகளை தீர்த்தும் வைத்து வருகின்றனர். இதன் காரணமாக, கேள்வி நேரத்தை அனைத்து உறுப்பினர்களும் முக்கியமாகக் கருதுகின்றனர். அதே நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகள் ஏ,பி,சி என்று ஆங்கில எழுத்துக்கள் அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மேலும், கேள்வி நேரத்துக்காக ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்படும்.
இந்த நிலையில், புதுவை சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் சிவாவின் கேள்வி வரும் நேரத்தில், கேள்வி நேரம் முடிந்துவிட்டது. எனினும், அதற்கு முன்னதாக தொடர்ச்சியாக  நியமன உறுப்பினர்களான வி.சாமிநாதன், எஸ்.செல்வகணபதி, கே.ஜி.சங்கர் என மூன்று பேரின் கேள்விகளும் வந்தன.
இதனால் அதிருப்தி அடைந்த சிவா, மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு, நியமன உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, சிவா மற்றும் நியமன உறுப்பினர்களை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து சமாதானப்படுத்தினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT