புதுச்சேரி

கனகன் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

4th Sep 2019 10:07 AM

ADVERTISEMENT

புதுச்சேரி கனகன் ஏரியில் மீன்கள் செத்து மிதந்து வருவதால், ஏரி நீரையும், மீன்களையும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகே கனகன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கழிவுநீர் வருவது இதுவரை தடுக்கப்படவில்லை. இதனால் பல நேரங்களில் கழிவுநீர் அதிகளவு ஏரியில் கலக்கிறது.
இதனிடையே, கடந்த சில நாள்களாக அந்த ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. 
இதையறிந்த புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஏரியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு செத்து மிதந்த மீன்களையும், ஏரி நீரையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில், ஏரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட செத்த மீன்களில் ஒன்றை சிதம்பரத்தில் உள்ள மீன் ஆராய்ச்சி மையத்துக்கு ஆய்வுக்காக மசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கனகன் ஏரியில் ஒரு குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த மீன்கள் மட்டுமே செத்துள்ளன. மற்ற ரக மீன்களுக்கு பாதிப்பில்லை. அந்த குறிப்பிட்ட ரக மீன்கள் மட்டும் எதனால் செத்தன என்பதை அறிய சிதம்பரத்தில் உள்ள மீன் ஆராய்ச்சி மையத்துக்கு ஏரியில் செத்து மிதந்த மீன் ஒன்றை ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். அங்கிருந்து அறிக்கை வந்த பின்னரே, எதனால் மீன்கள் செத்தன என்பது தெரியவரும். மேலும், கழிவு நீர் ஏரிக்கு வருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT