புதுச்சேரி

புதுவையில் அதிகாரச் சண்டை போட்டே ஆட்சி காலத்தை நகர்த்துகிறது காங்கிரஸ்: என்.ரங்கசாமி

6th Oct 2019 05:46 AM

ADVERTISEMENT


புதுவையில் அதிகாரச் சண்டை போட்டுக்கொண்டே, ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகளை காங்கிரஸ் அரசு நகர்த்தி விட்டதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனுக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி, சித்தன்குடி பிருந்தாவனம் பகுதியில் வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை மக்கள் மீது எனக்கு அக்கறை இருக்கிறதா, இல்லையா என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனது ஆட்சிக்காலத்தில்தான் பல நல்ல திட்டங்கள் மூலம் புதுவை பெரியளவில் வளர்ச்சியைப் பெற்றது. முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கினோம். மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, கல்விக் கட்டணம், சைக்கிள், மடிக்கணினி, ஏழைகளுக்கு இலவச அரிசி, துணி உள்ளிட்டவைகளை வழங்கினோம். அனைத்துத் திட்டங்களையும் தற்போதைய காங்கிரஸ் அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரத்தை வைத்துத்தான் நாங்கள் அப்போது செயல்படுத்தினோம். ஆனால், தற்போதைய காங்கிரஸ் அரசு நிர்வாகத்தில் அதிகாரம் யாருக்கு என சண்டைப் போட்டுக்கொண்டே, எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகளை நகர்த்திவிட்டது என்றார் என்.ரங்கசாமி.
பிரசாரத்தின்போது, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:
முதல்வர் நாராயணசாமி தனது ஆட்சியின் சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்குச் சேகரிக்க வேண்டும். அரசு நிர்வாகத்தை செயல்படுத்த முடியாததற்காக, எதிர்க்கட்சிகளின் மீது குற்றம் சுமத்தி அவர் தப்பிக்க நினைக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு மக்களைப் பற்றி கவலையில்லை என்று கூறி வரும் அவருக்கு, ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலை உள்ளது. மத்திய அரசு, துணை நிலை ஆளுநருடன் மோதல் போக்கை மட்டும் கடைப்பிடித்து வந்தால், மாநிலம் எவ்வாறு வளர்ச்சி அடையும் என்றார் அவர்.
பிரசாரத்தின்போது, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன்,  முன்னாள் அமைச்சர் ராஜவேலு, டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT