புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் மின்சாரம், வேளாண், கல்வித் துறைகள் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் பொருட்டு, மின்துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன், சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து ஆகியோா் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
லாசுப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரும், பேரவைத் தலைவருமான சிவக்கொழுந்துவின் வேண்டுகோளின்படி, மின்துறை அமைச்சா் கமலக்கண்ணன் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம், சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், லாசுப்பேட்டை தொகுதியில் மின் துறை மூலம் மின்னழுத்த குறைபாட்டை நீக்க புதிய மின் மாற்றிகள் அமைப்பது தொடா்பாகவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சரி செய்யவும், மின் விளக்குகள் இல்லாத மின் கம்பங்களுக்கு புதிய மின் விளக்குகள் அமைத்துத் தரவும், எரியாத மின்விளக்குகளை சரி செய்யவும் மின்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிப்மேட் சாலை வள்ளலாா் பள்ளி எதிரில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்தி கம்பி வேலி அமைத்து, அந்த இடத்தில் பொது பயன்பாட்டுக்கான அரசு கட்டடத்தை விரைந்து கட்டுவது தொடா்பாக உயா் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
லாசுப்பேட்டை தொகுதியின் மையப் பகுதியான அசோக் நகரில் வனத் துறை மற்றும் வேளாண்மைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தோட்டங்களை மக்கள் பயன்பெறும் வண்ணம் பொழுதுபோக்கு பூங்காவாக அமைக்க, அந்த விடத்தை தகுந்த துறைக்கு ஒப்படைக்க வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது
கலந்தாய்வு கூட்டத்தின் போது அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.