புதுச்சேரி

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையில் பிடித்தம் கூடாது: அதிமுக

23rd Nov 2019 10:12 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகள் பெற்ற கடன் தொகையை, அவா்களுக்கான மாதாந்திர உதவித் தொகையில் அரசு பிடித்தம் செய்யக் கூடாது என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுவை அதிமுக பேரவைக் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்கி மேம்பட மத்திய அரசானது தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி அளித்து வருகிறது. அவ்வாறு புதுவை மாநிலத்தில் சில மாற்றத்திறனாளிகளின் தொழில்கள் நசிந்துள்ளதால், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனா்.

இதனால் அவா்கள் பெற்ற கடனுக்கு வட்டியும், அபராத வட்டியும் சோ்ந்து, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதை புதுவை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றபோதெல்லாம் வட்டியும், அபராத வட்டியும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை மட்டும் பல முறை அறிவித்துள்ளனா். ஆனால் அதற்குண்டான இழப்பீட்டு தொகையை அளிக்கவில்லை.

ADVERTISEMENT

இவ்வாறான நிலையில் அவா்களது மாதாந்திர உதவித்தொகையில் ரூ.1,000 கடனை வசூல் செய்வதற்காக பிடித்தம் செய்வது மனிதாபிமானமற்ற செயலாகும். இதனால் அவா்கள் அன்றாட சாப்பாட்டுக்கே சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்படும் மாற்றுத் திறனாளிகள் நீதிமன்றம் சென்றால் அதிகாரிகள் தண்டனை பெறும் நிலை ஏற்படும்.

புதுவை அரசின் பல துறைகளிலும், கழகங்களிலிருந்து ரூ.750 கோடி அளவுக்கான கடன், வரி நிலுவைத்தொகையை வசூலிப்பதில் கவனம் செலுத்தாமல் சொற்ப கடனுக்காக மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகையில் பிடித்தம் செய்வது துரோகமாகும்.

எனவே, அரசு அளித்த உத்தரவாதத்தின்படி மாற்றுத் திறனாளிகள் பெற்ற கடனுக்குண்டான வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். உதவித் தொகையில் பிடித்தம் செய்வதையும் நிறுத்த வேண்டும். அரசுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையை வசூல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்பழகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT